Sunday, November 18, 2007

காமத்துப்பால்- கற்பியல்- தனிப்படர் மிகுதி-120

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

தான் காதலில் வீழ்ந்துவிட்ட கணவன் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காமநுகர்ச்சி என்னும் வித்தால்லாத(அதாவது இடறில்லாத,குறைவில்லாத) பழத்தை கொண்டது போலன்றோ?

காழ் - வித்து

-- தாம் விரும்பும் காதலர், தம்மையும் விரும்பக் கூடியவராக வாய்க்கப்பெற்றவர்களின் காதல், குற்றமில்லா கனியைப் பெற்றதைப் போன்றது.

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

காதலால் வீழ்ந்த மகளிரிர்க்கு அவரிடம் காதலால் வீழ்ந்த கணவரைப்பெற்றவர் மழையினால் நம்பி வாழ்வோர்க்கு காலத்தால் அளவரிந்து பெய்யும் மழையைப்பெற்றது போன்றது

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

தம்மால் விரும்பப்படுகின்ற கணவரால் விரும்பப்படுகின்ற மகளிர்க்கு 'நாம் வாழ்வோம்' என்ற செருக்கு அமையும்
அதாவது தாமிருவரும் இன்புற்று வாழுவோம் என்ற நம்பிக்கை இருக்கும்

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

கற்புடை மகளிராலே நன்குமதிப்படுவாரும் தம்மால் விரும்பப்படுகின்ற கணவரால் விரும்படாராயின் தீவினையுடைவரே

--
கெழி இலர் தாம் வீழ்வார் வீழப்படார் எனின் வீழப்படுவார்.
-- தாம் விரும்புகின்ற காதலர், அன்பில்லாதவராக, தம்மை விரும்பாதவராக அமைந்துவிட்டால், அவர் எவ்வளவுதான் நல்லவராக, நற்குணமுடையவாராக இருப்பினும் நல்வினை அற்றவரே.
கெழி - நட்பு, அன்பு


நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

நம்மிடம் காதல் கொள்ளாதவர் நம்மாலே காதல் கொள்ளப்பட்டரெனினும் நமக்கு என்ன இன்பத்தை தந்துவிட முடியும்

-- நாம் காதல் கொண்டவருக்கு நம் மேல் அன்பு இல்லாவிடின், அவரால் நமக்கு எந்த நன்மையும் இல்லை.

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

காவடிப்பாரம் போல காமமானது ஓரிடத்தில் உண்டாயின் வலிமிகும் இரண்டுபேரிடமும் ஒத்திருக்குமாயின் இன்பஞ்செய்வது
கா- காவடி

-- ஒருதலைக் காதல் மிகவும் துன்பமானது; காதலானது காவடியைப் போல் இருபுறமும் சமமாக இருத்தல் வேண்டும். அதுவே மிகவும் இனிமையானதும் ஆகும்.

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

இருவரிடமும் ஒத்து நில்லாமல் காமன் ஒருவரிடம் நின்று போர் செய்யும் காமன் நோயையும் துன்பமிகுவதையும் அறியானோ
பருவரல் - நோய், அருவருப்பு
பைதல் - துன்பம்

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

தம்மால் விரும்பப்படுகின்ற காதலிரிடமிருந்து இனிய சொல்லை பெறாது உயிர்வாழக்கூடிய மகளிரைப்போல கல்நெஞ்சை உடையர் இவ்வுலகத்தில் யாருமில்லை

-- தாம் விரும்புகின்றவரிடமிருந்து, ஒரு இனிய சொல்லைக் கூடப் பெறாதவர், இப்பூமியில் வாழ்வார் என்றால், அவரைவிட கல்நெஞ்சம் கொண்டவர் எவருமில்லை.

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

என்னால் விரும்பப்பட்ட தலைவர் அருள்செய்யாரெனினும் அவரிடம் எச்சொற்களும் என் செவிகளுக்கு இன்பஞ்செய்வனவாம்.

-- நான் விரும்புகின்றவர் என்னை விரும்பாவதவராக இருப்பினும், அவரைப் பற்றிய எந்த புகழுரையும் என் செவிக்கு இனியனவே.

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

உன்னோடு உறவாதவர்க்கு மிகுந்த நோயை சொல்லலுற்ற நெஞ்சே நீ வாழ்க அதைவிட கடலை தூர்க்க முயற்சி செய் அது எளிதானது

-- நெஞ்சே நீ வாழ்வாயாக! உன்னை விரும்பாதவர்க்கு, நீ அனுபவிக்கின்ற துன்பத்தை எடுத்துச் சொல்ல முற்படுவதைவிட, கடலையேத் தூர்த்துவிடலாம். அன்பற்ற காதலர்க்கு, தன் உள்ள நோயை எடுத்துரைக்க முயல்வது கடலைத் தூர்ப்பதை விட கடினமானது.
செறு - தூர்

No comments: